donderdag 20 oktober 2011

யாழ்ப்பாணத்து நினைவுகள் (பகுதி 1)

இக்கட்டுரைகாலச்சுவடு இணையத்தில் வெளியானது)
பக்தவத்சல பாரதி
ja-1இரண்டாயிரத்து ஒன்பது நவம்பரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் செல்ல நேர்ந்தது. அங்கு இரண்டு வாரங்கள் தங்கிச் சமூகவியல் துறையில் பயிற்றுவிக்கவும் கூடவே பேராசிரியர் கைலாசபதி நினைவுப் பேருரை ஆற்றவும் அழைக்கப்பட்டிருந்தேன். இலங்கையின் உலகப் புகழ்பெற்ற மானிடவியல் அறிஞர் கணநாத் ஒபயசேகராவின் தலைமாணாக்கர் பேராசிரியர், கலாநிதி என். சண்முகலிங்கன் அங்குத் துணை வேந்தராக இருந்து என்னை அழைத்தார்.
அந்தப் பயணத்தின்போது யாழ்குடா நாட்டின் சமூகத்தையும் பண்பாட்டையும் பற்றி நான் தெரிந்துகொண்டவை ஏராளம். எனது நினைவுக் குறிப்புகளிலிருந்து சிலவற்றை இங்குப் பதிவுசெய்ய விரும்புகிறேன்.
இலங்கையின் சமூக, சமய, மொழி, பண்பாட்டு உருவாக்கம் மிகவும் சிக்கலானது. அதை இனச்சார்பற்ற நிலையில் அறிவுபூர்வமாகவே அணுக வேண்டும். தீவின் பூர்வக் குடிகள் வேடர், நாகர், இயக்கர் ஆகியோரே. அவர்களின் தொடர்ச்சியாகத் தமிழர்கள், சிங்களவர்கள் புதிய இனங்களாக உருவெடுத்தார்கள்.
சிங்களவர்கள் திராவிட மொழிகள் பேசப்படும் தென்னிந்தியாவுக்கு அப்பால் உள்ள வட இந்தியாவிலிருந்து குடியேறியதாகக் கூறுகிறார்கள். சிங்களம் வட இந்தியாவுக்குரிய இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் சொல்கிறார்கள். இவர்கள் சிங்களம் பேசினாலும், திராவிட உறவுமுறையைப் பின் பற்றுகிறார்கள். பௌத்த மதத்தைப் பின்பற்றுகிறார்கள். கி ஷிலீஷீக்ஷீt பிவீstஷீக்ஷீஹ் ஷீயீ சிமீஹ்றீஷீஸீ எனும் மிகச் சிறந்த நூலை எழுதிய காட்ரிங்டன் என்பவர் “சிங்களவர்கள் வட இந்திய மொழியையும் தென்னிந்தியச் சமூக அமைப்பையும் கொண்டவர்கள்” என்பதை வெகுகாலத்திற்கு முன்பே நன்கு விளங்கப்படுத்தினார்.
இவருக்குப் பின் பலர் சிங்கள மக்களை ஆராய்ந்திருக்கிறார்கள். ஹோகார்ட், ஆரிய பாலா, பியரீஸ், தம்பையா, லீச், யால்மன், ஒபயசேகரா ஆகியோர் சிங்களவருக்கும் திராவிடர்களுக்கும் உள்ள முக்கியமான ஒற்றுமையைச் சுட்டிக்காட்டியுள்ளார்கள். பண்டைக்காலம் தொட்டுச் சிங்களவர்கள் தென்னிந்தியர்கள் பின்பற்றும் மாமன் மகள், அத்தை மகள் ஆகியோரை மணக்கும் முறை மணத்தைக் (cross-cousin marriage) கடைப்பிடிக்கிறார்கள். ஆகவே இந்திய-ஆரிய மொழியைப் பேசினாலும் பௌத்த மதத்தைப் பின்பற்றினாலும் இந்துக்களாகிய தென்னிந்திய மக்களின் உறவுமுறையையே கொண்டிருக்கிறார்கள். மிகச் சில உறவுமுறைச் சொற்களைத் தவிர பெரும்பாலானவை திராவிடச் சொற்களாகவே உள்ளன. புதா, துவா, பானா போன்றவை பாலி மொழிச் சொற்களின் சாயலைக் கொண்டுள்ளன. இவை நவீன இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்திலிருந்து வராமல், இடைக்கால இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்திலிருந்து வந்தவை என்கிறார் திராவிட உறவுமுறையை ஆராய்ந்த ட்ரவுட்மன். நவீன ஆய்வுகள் பல புதிய கருத்துகளை முன்வைக்கின்றன. அவற்றை முற்சாய்வு ஏதுமின்றித் திறந்த மனத்துடன் அணுக வேண்டும்.
சிங்களவர்களின் பூர்வ வரலாற்றை வாய்மொழி வரலாற்றிலிருந்தும் இனவரலாற்றிலிருந்தும் ஆராய வேண்டிய தேவையுள்ளதை நான் உணர்கிறேன். மகாவம்சத்தில் உள்ள சில குறிப்புகளை வாய்மொழி வழக்காறுகளோடு பொருத்தி ஆராய வேண்டியது காலக் கடமையாகக் கருத வேண்டும். ஒரு வாய்மொழிக் கதையைக் கவனிப்போம். புத்தர் இறந்த அதே நாளில் (கி. மு. ஆறாம் நூற்றாண்டு) விஜயன் தன் சகாக்களுடன் இலங்கையை வந்தடைந்தான். முதலில் அவன் குவேனி என்ற அரக்கியை மணந்தான். பின்னர் அவளைக் கைவிட்டுத் தென்னிந்தியத் தமிழ் இளவரசியை மணந்துகொண்டான். அவளுடன் வந்த தமிழ்ப் பெண்களை அவன் தோழர்கள் மணந்துகொண்டார்கள். இந்தக் கலப்பால் சிங்களவர்கள் உருவானார்கள். இப்படியான வாய்மொழிக் கதைகள் உள்ளன.ja-2
வாய்மொழிக் கதைகள் இனவரலாற்று மீட்டுருவாக்கத்திற்கு மிக முக்கியமானவை என்பதை உலகளாவிய நிலையில் பல அறிஞர்கள் வலியுறுத்திவருகின்றனர். இனவரலாற்று அணுகுமுறையில் பல ஆய்வு முறைகள் உருவாக்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில் பார்த்தால் வியஜனும் அவனுடைய சகாக்களும் பின்பற்றும் திராவிட உறவுமுறை அவர்களது பண்டைய தென்னிந்திய உறவைக் காட்டுகிறது. சிங்களவர்கள் வட இந்தியாவிலிருந்து ஒரே இரவில் இலங்கையை வந்தடையவில்லை. தென்னிந்தியாவின் திராவிடப் பண்பாட்டையே உள்வாங்கியிருக்கிறார்கள். தென்னிந்தியா வழியாக மிகவும் மெதுவான புலப்பெயர்வின் மூலமே இலங்கை வந்து சேர்ந்தார்கள். அத்தகைய காலகட்டத்தில் அவர்கள் தென்னிந்தியச் சமூகத்தோடு குறிப்பாக அன்றைய தமிழகப் பௌத்தர்களோடு உறவாடியும் கொண்டு கொடுத்தும் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். இன்று அவர்கள் பின்பற்றும் திராவிடர்களின் முறைமணமும் உறவுமுறையும் மிக முக்கியமான இனவரலாற்றுச் சான்றுகளாகும். இது மட்டுமல்ல. இன்னும் பல சான்றுகளைப் பண்பாட்டுத் தளத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாம்.
இலங்கையில் மனிதக் குடியேற்றம் பற்றிய ஆய்வொன்றை என்னுடைய நண்பர் சுப்பிரமணியம் விசாகன் செய்துகொண்டிருக்கிறார். இவர் லண்டனில் அருங்காட்சியகத்தில் மானிடவியலாளராகப் பணியாற்றியவர். அந்த ஆய்வு மரபணுவழியில் மேற்கொள்ளப்படும் ஆய்வாகும். இதன்படி சிங்களவர்களும் தமிழர்களும் ஒரே இனமூலத்தைக் கொண்டவர்கள். இவர்கள் மொழியாலும் மதத்தாலும் மட்டுமே பிரிந்து நிற்கிறார்கள். இனமூலத்தால் ஒன்றுபட்டு நிற்கிறார்கள் என்கிறார். இத்தகைய ஆய்வுகளை உணர்ச்சிவயப்பட்டு ஒதுக்கிவிட முடியாது.
இன்று தமிழகத்தில் தமிழர்கள் முஸ்லிம்களாகவும் கிறித்தவர்களாகவும் மாறிவிட்டதால் அவர்களுடைய டி. என். ஏ. மாறிவிடுமா என்ன? தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட மானிடவியல் ஆய்வுகள் மிக முக்கியமான முடிவைக் கூறுகின்றன. பிள்ளைமார்களுக்கும் பள்ளர்களுக்கும் இடையே உள்ள “சமூக இடைவெளி” மிக நீண்டது. என்றுமே நெருங்காதது. ஆனால் டி.என்.ஏ. ஆய்வின்படி பார்த்தால் இருவருக்குமான “மரபணு இடைவெளி” மிகக் குறைவு. பிராமணர்களுக்கும் பிராமணர் அல்லாதவர்களுக்கும் சமூக இடைவெளி மிகவும் அதிகம். ஆனால் டி. என். ஏ. வழியிலான இடைவெளியைப் பார்த்தால் அதிலும்கூடச் சில பிரிவினரிடம் மிகக் குறைவாக உள்ளது. காரணம் இந்தியாவில் பிராமணர்கள் மற்ற சாதியினருடன் ஏராளமான அளவு கலந்துவிட்டனர். “கருப்பு பிராமணர்கள்” அனைவரும் தமிழர்களே. இவர்கள் ஒரு காலகட்டத்தில் பிராமணர்களாகப் பூணூல் போட்டவர்கள். இவ்வாறான சூழலே சிங்களவருக்கும் தமிழர்களுக்கும் நேர்ந்திருக்கும் என்பதை மேலை ஆய்வாளர்கள் ஆராய்ந்துவருகிறார்கள். அவற்றையெல்லாம் சுப்பிரமணியம் விசாகன் மிக நன்றாக ஒப்பிட்டுக் காட்டுகிறார். யாழ்ப்பாணத்திற்குச் செல்வதற்கு முன் நான் கற்றறிந்த செய்திகள் இவை. அங்குத் தங்கியிருக்கும் காலத்தில் எவற்றையெல்லாம் அறிய வேண்டுமென்ற குறிப்புகளை நான் முன்கூட்டியே விரிவாகத் தயாரித்துக்கொண்டு சென்றேன்.
யாழ்ப்பாணச் சமூகம் பற்றியும் பண்பாடு பற்றியும் மானிடவியல் கண் கொண்டு அறிந்துகொள்ள வேண்டும் என்பது என்னுடைய முதன்மையான திட்டமாகும். முதலில் சமூக அமைப்பு குறித்து அறிய விரும்பினேன். அங்கு நான் கண்ட சாதி அமைப்பு சற்று வித்தியாசமானது. தமிழ்நாட்டுச் சாதி முறையோடு அது ஒத்துக் காணப்பட்டாலும் சில தனித்தன்மைகளைக் கொண்டிருந்தது. அங்குப் பிராமண மேலாண்மையில்லை. இது வெளிப்படையானது. யாழ்குடாவில் பிராமணர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இணுவிலில் உள்ள அந்தணர்களுக்கான குருகுலத்தை நிர்வகித்துவரும் மகாதேவ குருக்கள் யாழ்ப்பாணத்தில் ஏறக்குறைய 600 பிராமணக் குடும்பங்கள் உள்ளன என்றார். யாழ்ப்பாணத்தில் பிராமணர் மட்டுமே கோயில் பணியில் ஈடுபடுவதில்லை. சைவக் குருமார்களும் கோயில் பூசகர்களாக உள்ளனர். இவர்களில் சிலர் கன்னட மரபில் வந்த வீரசைவர்களாகத் தங்களைக் கூறிக்கொள்கின்றனர். பண்டாரங்கள், கைக்குழார்கள் ஆகிய இரண்டு இடைப்பட்ட சாதியாரும் சமஸ்கிருதவயப்பட்டுப் பூசகர்களாக உள்ளனர். இந்நிலையில் ஆதிகாலம் தொடங்கிப் பிராமணர் எண்ணிக்கை யாழ்குடா நாட்டில் அதிகம் வளரவில்லை.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகவியல் துறை அங்குள்ள மிக முக்கியமான துறைகளில் ஒன்று. இன்று உலகளாவிய ரீதியில் சமூகவியல் கல்வியின் தேவை அதிகமாகக் காணப்படுவதால், யாழ்ப்பாணத்திலும் மாணவர்கள் அதிகளவில் சமூகவியலைத் தெரிவுசெய்கின்றனர். அங்குள்ள கலைத்திட்டம் உலகளாவிய சமூக அமைப்பு தொடங்கி யாழ்ப்பாணச் சமூகம்வரை கற்பிக்கும் பாடத்திட்டத்தைக் கொண்டுள்ளது. வகுப்பறையிலேயே மாணவர்கள்வழி யாழ்ப்பாணச் சமூகத்தைப் பற்றி நிறையத் தெரிந்துகொண்டேன். ஈழத்து அறிவு மரபு தனித்துவமானது, உயர்ந்தது என்பதை மாணவிகளின் புரிதல் திறன்வழி அறிந்துகொண்டேன். தமிழிலேயே உயர்கல்விவரை கற்கின்றனர். பேராசிரியர் என். சண்முகலிங்கன் தலைமையில் தோற்றுவிக்கப்பட்ட இத்துறை தமிழ் வழிச் செயல்படுவது நமக்கெல் லாம் முன்மாதிரியாகும். அவர் உருவாக்கியுள்ள கலைச்சொற்களும் பாடநூல்களும் ஆய்வுநூல்களும் தமிழால் முடியுமென்ற முழக்கத்தை மெய்ப்பிக்கவல்லவை. மானிடவிய லும்கூட இத்துறையில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது. பல்துறை அணுகு முறையை வலுப்படுத்தும் சிறந்த முன்மாதிரியான முயற்சியாகும்.
இனி யாழ்குடாவின் சாதிமுறைக்கு வருவோம். யாழ்ப்பாணத்தில் “சாதி பதினெட்டு” என்ற ஒரு பொதுவழக்கிருந்தாலும் இருபதுக்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளன. மேல்தட்டில் பிராமணர்கள் சைவக்குருக்கள் இருக்கிறார்கள் என்பது கற்பிதமே. உண்மையில் சமூக அந்தஸ்தில் வெள்ளாளர்களுக்கு இணையாகவே உள்ளனர். எதார்த்தத்தில் வெள்ளாளர்களே ஆதிக்கச் சாதியினர். எண்ணிக்கையிலும் இவர்களே அதிகம். நிலவுரிமையாளர்களான இவர்களுக்குக் கமம் (விவசாயம்) முதன்மைத் தொழில். இவர்களுக்கு அடுத்து கோவியர், திமிலர், முக்குவார், கரையார், பண் டாரம், தச்சர், கொல்லர், தட்டார், கன்னார், சிப்பாச்சாரி, கைக்குழார், நட்டுவர், குயவர், சாண்டார், நளவர், அம்பட்டர், வண்ணார், பறையர், பள்ளர், சக்கிலியர் ஆகிய சாதியினர் முக்கியமானவர்கள்.
மரபான கிராமிய வாழ்வில் கோவியர்கள் வெள்ளாளர் வீடுகளில் வேலைசெய்தவர்கள். கரையார் ஆழ்கடலில் மீன்பிடித்தலையும் முக்குவார் கரையோரத்தில் மீன் பிடித்தலையும் செய்கின்றனர். கைக்குழார் தமிழகச் செங்குந்தர் போன்று நெசவுசெய்துவந்தனர். சாண்டார்கள் எள்ளெண்ணை ஆட்டும் செட்டியார்கள். சிப்பாச்சாரி கோவில் சிலைகள் சிற்பங்கள் செதுக்குபவர்கள். நட்டுவர் கோவில்களிலும் மங்கள நிகழ்ச்சிகளிலும் தவில், நாதஸ்வரம் வாசிப்பவர்கள். நளவர்கள் பனைமரம், தென்னை மரங்களில் கள் இறக்கும் சாணார்கள். யாழ்ப்பாணத்தில் கள் இறக்கும் நளவர்கள் 8 பிரிவினர்களாக உள்ளனர். அஞ்சனன் தாழ்வு நளவர், தேவரிக்குள நளவர், மறவைக்குள நளவர், கற்குள நளவர், வண்ணாங்குள நளவர், வாடை நளவர், சோளம் நளவர், மரமேறிகள் எனச் சாதிக்குள் சாதியாக விளங்குகிறார்கள். பண்டாரங்கள் கோவில்களில் பூமாலை கட்டும் உதவியாளர்கள். கன்னார் பாத்திரங்கள் சீர்செய்பவர்கள்.
சாதிகளின் பெயர்கள் செய்யும் தொழிலுக்கேற்பக் கூடுதல் பெயர்களைக் கொண்டிருக்கின்றன. தச்சர் ஆச்சாரியார் ja-3எனவும் அம்பட்டர் பரியாரியார் எனவும் வண்ணார் கட்டாடியார் எனவும் நாளாந்த வழக்கில் கூறப்படுகின்றனர்.
யாழ்ப்பாணச் சாதி அமைப்பில் சாதிக்குள் சாதி எனும் உட்சாதிப் பிரிவுகள் நிறையவே உள்ளன. குடிமைத் தொழிலைச் செய்யும் சேவைச் சாதியார் தாங்கள் சேவை செய்யும் சாதியின் அடிப்படையில் பெயர் பெறுகின்றனர். அம்பட்டரில் “வெள்ளாம் அம்பட்டர்” என்ற பிரிவினர் உண்டு. இவர்கள் வெள்ளாளர், கோவியர், தச்சர், நட்டுவர் போன்ற தம்மில் உயர்சாதியினருக்கு ஊழியம் செய்பவர்கள். “கரையாம் அம்பட்டர்” கரையார் சாதியாருக்கு ஊழியம் செய்கிறார்கள். “சீயாம் அம்பட்டர்” பஞ்சமர்களுக்கு ஊழியம் செய்கிறார்கள்.
யாழ்ப்பாணத்திலும் மேல்நோக்கிய சமூகப் பெயர்வு காலவோட்டத்தில் நடந்துள்ளது. “கள்ளர், மறவர், கனத்த அகம்படியார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்” என்ற போக்கு உள்ளது. ஆரம்ப காலத்தில் குடிமைத் தொழில் செய்துவந்த வண்ணார், அம்பட்டர் போன்றோர் கடந்த முப்பது ஆண்டுக் காலப் போர்ச் சூழலாலும் விடுதலைப் புலிகள் அமைப்பின் செல்வாக்காலும் தமக்கென்று ஓர் அமைப்பை உருவாக்கினார்கள். பரம்பரைப் பரம்பரையாகச் செய்துவந்த குடிமைத் தொழில்களான சாவீட்டில் மயிர் இறக்குதல், பூப்பு (சாமர்த்தியம்), பிரசவம், சாவு ஆகிய நிகழ்வுகளில் துடக்குத் துணியகற்றல் போன்ற தொழில் முறைகளிலிருந்து விடுவித்துக்கொள்கிற போக்கை அவதானிக்க முடிந்தது.
கோயிலுக்குப் பூமாலை கட்டி வந்த பண்டாரங்கள் காலப்போக்கில் கோயிலில் உதவியாளர்களாகச் செயற்பட்டுப் பின்னர் கோயில் பூசாரிகளாகத் தங்களை உயர்த்திக்கொண்டதையும் அவதானிக்க முடிந்தது. தமிழகத்தில் குயவர்கள் அக்கி எழுதுகிறார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் கன்னார் (பாத்திரங்கள் செப்பனிடுவோர்) அக்கி கீறுகிறார்கள்.
யாழ்ப்பாணத்தின் ஊர் முறையும் வாழ்விட முறையும் மிகவும் பாரம் பரியமானவை. இங்குப் பல சாதியினர் வாழும் கிராமங்களே அதிகம். கிராமங்கள் பொதுவாக “ஊர்” என்று அழைக்கப்படுகின்றன. தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் வாழுமிடம் “சேரி”. இந்த வழக்கு யாழ்ப்பாணத்தில் இல்லை. அங்கெல்லாம் ஊரின் ஒரு பக்கத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் இருக்கின்றனர். ஒரு சாதியினர் மட்டும் வாழும் கிராமங்கள் ஆனையிறவின் தெற்குப் பகுதியில் காணப்படுகின்றன. பூகோளம் சார்ந்த வாழ்விடத்தில் சமூகம் சார்ந்த சாதியத்தின் தொடர்ச்சி இன்றும் உள்ளது. இங்குள்ள வீதிகள் அல்லது குறிச்சிகள் அம்பனாக்கடவை, தச்சக்கடவை, செட்டிக் குறிச்சி. செங்குந்தார் வீதி, பண்டாரிக் குளம் எனச் சாதிப் பெயர்களில் உள்ளன.
இங்குள்ள வீடுகளும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. தமிழ் நாட்டுக்காரர்கள் வாழ்வில் ஒரு முறையாவது யாழ்ப்பாணத்தையும் மட்டக்களப்பையும் பார்க்க வேண்டியது அவசியம். தமிழ்ப் பண்பாட்டின் ஆதி மரபைப் பேணிக் காத்து வரும் இவர்களுடைய வாழ்வு முறை மிகவும் அலாதியானது.
வீடுகள் உள்ள காணியானது “வளவு”. பாரம்பரிய வளவுகள் 2 பரப்பு, 4 பரப்பு, 6 பரப்பு என இன்னும் அதிகமாகவும் இருக்கும். இதை நாளாந்த வழக்கில் ‘வீட்டுக் காணி’ என்பார்கள். வளவுக்கு அருகே “தோட்டக் காணி” இருக்கும். இங்குத் தோட்டக்கால் பயிர்களைப் பயிரிடுகிறார்கள். அடுத்தது “வயல் காணி”. இங்குத்தான் பாரம்பரியமான மொட்டக் கறுப்பன் நெல் பயிரிடப்படுகிறது. குத்தரிசி, சிகப் பரிசி, பொங்கலரிசி என அனைத்தும் மொட்டக் கறுப்பன் நெல்லில் இருந்து கிடைக்கின்றன. இந்த அரிசி சிகப்பாகத்தான் இருக்கும். இது ஆறுமாதப் பயிர். இதுவே யாழ்ப்பாணத்தில் விலைகூடிய அரிசி. இலங்கைப் பணத்தில் ரூ. 60 முதல் 120 வரை விற்கிறது. இப்போது குறைந்த காலப் புதிய ரகங்கள் அறிமுகமாகியுள்ளன. புதிய ரக அரிசிகளும் சிகப்பாகவே உள்ளன. வயல் காணியில் எள்ளு, உழுந்து, பயறு, குரக்கன் (சாமை போன்றதொரு தானியம்) போன்ற பயிர்களும் விளைகின்றன. வயல் காணிகளைப் “பரப்பு” என்றே சொல்கிறார்கள். வீட்டுப் பரப்புக்கும் வயல் பரப்புக்குமான அளவு தனித்தனியானது. ஏக்கர் எனும் வழக்கு யாழ்ப்பாணத்தின் நாளாந்த வழக்கில் இன்னும் வரவில்லை.
(தொடரும்)

Geen opmerkingen:

Een reactie posten