donderdag 20 oktober 2011

யாழ்ப்பாணத்து நினைவுகள் (2)

பக்தவத்சல பாரதி
jaffan-16யாழ்ப்பாணத்தில் வீட்டு அமைப்பு மிகவும் தனித்துவமானது. நான் மாணவர்களுடன் சென்று பார்த்த அராலி, வட்டுக்கோட்டை போன்ற இடங்களில் மரபார்ந்த வீட்டுக் கட்டமைப்பைக் காண முடிந்தது. குறிப்பாகச் சங்கடப்படலை, சுமைதாங்கி, நீர்த்தொட்டி கொண்ட “நாட்சார வீடு” அமைப்பு முறை பிரதானமானது. நாட்சார வீடானது பண்டைய யாழ்ப்பாண மக்களின் கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றதாக இருந்தது. சங்கடப்படலை என்பது வீட்டின் முகப்பில் கட்டப்படும் நிழல் தரும் சாரமாகும். எவரும் இங்குச் சற்று இளைப்பாறலாம். அதன் அருகே சுமைதாங்கியும் நீர்த்தொட்டியும் உள்ளன. இவை வழிப்போக்கர்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவுகின்றன.
தஞ்சாவூர் டெல்டா பகுதிபோல் காட்சியளித்த வழுக்கையாறு வழியாக நாங்கள் சென்றபோது “ஆவுரைஞ்சிக் கல்”, “கேணி” இரண்டும் ஆங்காங்கு என் கண்ணில் பட்டன. கேணிகள் அவ்வழியாக வரும் ஆடு, மாடுகளின் தாகத்தைத் தணிக்கின்றன. ஆவுரைஞ்சிக் கல் ஏறக்குறைய 4 அடி உயரமுள்ள உருண்டையான கல்தூண். ஆடு, மாடுகள் உடலை உரைஞ்சிக்கொள்வதற்காக இது நடப்பட்டிருந்தது. விவசாய நாகரிகத்தில் அச்சாணியாக விளங்கிய கால்நடைகளின் மீது யாழ்ப்பாணத் தமிழர்கள் காட்டிவந்த மனிதநேயத்தின் சாட்சிகளாக இவை இன்றும் நிற்கின்றன. ஆப்பிரிக்க நூயர் பழங்குடியினரே கால்நடைகளை மிக அதிகமாக நேசிப்பவர்கள் என்ற இனவரைவியல் கருத்து யாழ்ப்பாணத்துக்குச் சென்றவுடன் என்னுள் மாறத் தொடங்கிவிட்டது.
இலங்கையில் தமிழர்கள் பிரதேச வாரியாக வேறுபட்ட வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கிறார்கள். இதை வரலாறு நெடுகக் காண முடிகிறது. யாழ்ப்பாணத் தமிழர்கள் தேசவழமைச் சட்டத்தைப் பின்பற்றி வாழ்கிறார்கள். கிழக்கே மட்டக்களப்புத் தமிழர்கள் முக்குவர் சட்டத்தைப் பின்பற்றுகிறார்கள். சிங்கள மக்கள் கண்டியச் சட்டத்தைப் பின் பற்றி வாழ்கிறார்கள். தேசவழமைச் சட்டத்தை ஒல்லாந்தர்கள் கி.பி 1707இல் முழுமையான சட்டமுறையாக உருவாக்கினாலும் அது தமிழர்களின் பன்னெடுங்கால வரலாற்றோடு இருந்து வந்த ஒன்று. மரபுவழிப்பட்ட இந்த மூன்று வாழ்வு முறைகளும் மூன்று வெவ்வேறு சமூக அசை வியக்கங்களைக் கொண்டுள்ளன.
தமிழகத்தில் தமிழ்ச் சமூகம் கொண்டுள்ள தொன்மையைவிட ஈழத்தமிழர்கள் கொண்டுள்ள பாரம்பரியம் தமிழர்களின் தொன்மையை நன்கு விளக்குகிறது. தமிழ்ச் சமூகத்தின் தொன்மையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் சேரர் தேசத்தையும் மட்டக்களப்பு, யாழ்குடா நாட்டையும் ஒப்பிட்டு அறிய வேண்டியது மிகவும் அவசியமாகும். மனித குலத்தில் தோன்றிய முதல் சமூக அமைப்பான தாய்வழிச் சமூக முறையை இத்தகைய ஒப்பிட்டு நிலையில்தான் மீட்டுருவாக்கம் செய்ய முடியும். சேர நாட்டில் காணக்கூடிய “மரு மக்கள்தாய முறை” இன்னும் உயிர்ப்புடன் மட்டக்களப்பில் உள்ளது. யாழ்ப்பாணச் சமூகம் இன்று ஆண்மையச் சமூகமாக மாறிவிட்டாலும் தாய்வழிச் சமூகத்தின் கூறுகளைச் சீதனம், முதுசொம் போன்றவை மூலம் காண முடிகிறது. மகளுக்குச் சொத்தைக் கண்டிப்பாகக் கொடுக்கிறார்கள்.
யாழ்குடா நாட்டில் காணப்படும் இத்தகைய குடும்ப அமைப்பில் கொண்டுள்ள உறவுகளை ஆராயும்போது அது சேரர்களின் தாயமுறையிலிருந்து பிரிந்துசென்ற பண்பாட்டுத் தொடர்ச்சியை விளக்குகிறது. பண்டைய சேரர் தேசம் தொடங்கி மட்டக்களப்புவரை உள்ள பண்பாட்டுப் பிரதேசம் தாய்வழிப் பிரதேசமாக இருப்பதை அறிய முடிகிறது.
தமிழகத்தில் இன்று நாம் காண முடியாத பண்பாட்டுக் கூறுகளை ஈழத்தில் மட்டுமே காணலாம். யாழ்குடாவில் திருமணத்தின்போது பெரிதும் வெளிப்படுகின்ற ‘சீதனம்’, ‘முதுசொம்’, ‘தேடிய தேட்டம்’ ஆகியவை தமிழ்ச் சமூக மீட்டுருவாக்கத்திற்கு மிகவும் உதவும் பண்பாட்டுக் கூறுகளாகும். சீதனம் என்பது திருமணத்தின்போது மணப்பெண் தன் பெற்றோரிடமிருந்து பெறுகின்ற சொத்தாகும். நகை, ரொக்கம், வீடுவளவு ஆகிய மூன்றும் இதில் முதன்மை பெறுகின்றன. சீதனமாக வீடுவளவு (தோட்டத்துடன்கூடிய வீடு) பெண்ணுக்குக் கொடுப்பதால் ஆண் பிள்ளைகளுக்கு வீடு கிடைப்பதில்லை. அதனால் திருமணத்திற்குப் பின் ஆண்கள் மனைவிக்குக் கிடைக்கும் வீட்டையே வாழ்விடமாகக் கொள்வது மரபு. முதுசொம் என்பது தந்தைவழிச் சொத்தாகும். இதிலும் ஒரு பகுதி பெண்ணுக்குக் கிடைக்கிறது. தேடிய தேட்டமென்பது தந்தை தன் வாழ்நாளில் சுயமாகச் சம்பாதிப்பதாகும். இதிலும் ஒரு பகுதியைத் தன் மகளுக்குக் கொடுக்கிறார். இவ்வாறாகப் பெண்ணின் சமூகப் பெறுமானம் இலங்கைத் தமிழரிடம் உயர்ந்து காணப்படுகிறது. காரணம் தொல் தாய்வழிச் சமூகத்தின் மிச்ச சொச் சங்கள் அங்குப் பேணப்படுகின்றன.
யாழ்ப்பாணத்தில் திருமண நடைமுறைகள் பண்பாட்டு ஆய்வாளனாகிய என் கவனத்தை வெகுவாகவே ஈர்த்தன. அவர்களுடைய பாரம்பரிய முறை இன்றும் காணப்படுகிறது. பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் ஜாதகப் பொருத்தம் பார்த்துப் பேசி முடித்துச் செய்யும் “ஏற்பாட்டுத் திருமணமே” மிகப் பரவலான முறை. திருமணத்திற்கு முன்னர் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் பரிசம்போடுவதோ நிச்சயிப்பதோ இல்லை. ஆனால் பரஸ்பரம் சந்தித்து “சம்பந்தக் கலப்பு” செய்கிறார்கள். தொடக்கத்தில் மாப்பிள்ளை, மணப்பெண்ணைப் பார்ப்பதுகூடப் பொது இடங்களில் தான். இந்திய வம்சாவழியினரிடம் மட்டுமே தமிழக நடைமுறைகள் காணப்படுகின்றன.
திருமணத்திற்கு முதல் நாள் “பெண் அழைத்தல்”, “வரவேற்பு” எதுவுமில்லை. முதல் நாள் மண்டபத்தில் கூடுவதுமில்லை. திருமண நாளன்றே பெண் அழைத்தல் உள்ளிட்ட எல்லாச் சடங்குகளும் நடைபெறுகின்றன. மண்டபத்தில் திருமணம் நடைபெறுவது இன்று பெருகிவிட்டாலும், பாரம்பரியமாகப் பெண் வீட்டில் திருமணம் நடை பெறுவதையும் சில இடங்களில் காண முடிகிறது. திருமணச் செலவை இரு வீட்டாரும் ஏற்றுக்கொள்கின்றனர். மாப்பிள்ளை வீட்டார் மணப் பெண்ணுக்குச் செய்யும் தாலிக் கயிறை 5 பவுன் தொடங்கி 15 பவுன்வரை தங்களுடைய தகுதியைக் காட்டும் வகையில் செய்கிறார்கள். பெண் வீட்டார் மாப்பிள்ளைக்குக் கொடுக்கும் சீதனம் திருமணப் பதிவிற்குப் பின்னர் கொடுக்கப்படும். சீதனம் அதிகம் கொடுக்கும்போது மாப்பிள்ளை வீட்டாரிடம் “எத்தனை பவுனில் தாலிக்கயிறு செய்கிறீர்கள்?” என வலியுறுத்திக் கேட்பார்கள். திருமண நாளன்றே சாந்திமுகூர்த்தம் மாப்பிள்ளை வீட்டில் நடைபெறும். திருமணத்திற்குப் பின் மணமகன் மனைவியின் சீதன வீட்டில் வாழ்வதே மரபான பழக்கமாகும். ஆனால் இன்றைய நவீனத் தொழில்சார் வாழ்வு முறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்துப் பண்பாட்டில் “வாழ்வு, சாவு” இரண்டிலுமே மிகுந்த தனித்துவங்கள் உண்டு. வாழ்வுச் சடங்குகளில் சில வேறுபாடுகள் என்றால், சாவுச் சடங்குகளிலும் சில கூர்மையான வேறுபாடுகள் உள்ளன. தமிழகத்தில் வசதி படைத்தவர்கள் இறந்தோரின் நினைவாக மாதந்தோறும் அமாவாசை அன்று திதி படைத்துக் காக்கைக்குச் சோறிட்டு இறந்தவர்களை வணங்குகிறார்கள். யாழ்ப்பாணத்திலோ ஆணுக்கு அமாவாசை, பெண்ணுக்குப் பௌர்ணமி ஆகும். குறிப்பாக மாதந்தோறும் வருகின்ற இந்தத் திதிகளை அதிகம் பேர் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் வருடம் தோறும் வருகின்ற ஆடி அமாவாசையில் ஆணின் நினைவாகவும். சித்திரா பௌர்ணமியில் பெண்ணின் நினைவாகவும் திதி கொடுப்பார்கள்.
jaffna-15யாழ்ப்பாணத்தில் கோயில்களும் வழிபாட்டு முறைகளும் நீண்ட நெடிய மரபைச் சார்ந்துள்ளன. சைவமே அங்குப் பிரதானம். ஆனால் தொல் சமயக் கூறுகள் பலவற்றைக் காண முடிகிறது. வைரவர் கோவில்கள் இன்றும் பரவலாக உள்ளன. மரத்தடியில் சிறிய கோயில்களாக உள்ளன. வீட்டு வளவுக்குள்ளேயும் சிறிய இடத்தில் வைத்து வைரவரை வழிபட்டுவருகின்றனர். ஆதியில் வைரவர் கோயிலில் சூலம் வைத்து வழிபடும் வழக்கம் அதிகமாக இருந்துள்ளது. போர்த்துக்கேயர் காலத்தில் இந்துக் கோயில்களுக்குப் பெரும் ஆபத்து இருந்துள்ளது. இக்காலத்தில் சைவசமய வழிபாட்டைப் பாதுகாத்தவை வைரவர் வழிபாடேயாகும். ஏனெனில் அவர்கள் ஊருக்குள் வரும்போது மேலோட்டமாக நட்டு வைத்திருந்த வைரவர் சூலத்தைப் பிடுங்கித் தலைகீழாக வைத்து அதன் அடையாளத்தை மாற்றிவிடுவார்கள். இதனைவிட யாழ்ப்பாணத்தில் வல்லியக்கன் வழிபாடு, அண்ணமார் வழிபாடு, நாக வழிபாடு, மர வழிபாடு போன்றவை தொல்சமயத்தின் தொடர்ச்சியாக இன்றும் உள்ளன. பின்னாளில் தான் அம்மன் வழிபாடு அதிகமானது. துர்க்கை வழிபாடு இலங்கையில் புதிய எழுச்சியாகப் பெண்கள் மத்தியில் உருவான முறையை யாழ் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் என். சண்முகலிங்கன் அவர்கள் “இலங்கையில் துர்க்கையின் புது முகம்” எனும் தலைப்பில் ஆராய்ந்துள்ளார்.
தமிழகத்தில் இன்று கண்ணகி வழிபாடு முற்றிலும் இல்லை. அது மாரியம்மன் வழிபாடாக முழுவதும் உருமாறிப்போய் நிற்கிறது. ஆனால் ஈழத்தில் கண்ணகி வழிபாடு உயிர்ப்புடன் இன்றும் காணப்படுகிறது. குறிப்பாக, மட்டக்களப்பில் 30க்கும் மேற்பட்ட கண்ணகி கோயில்கள் இன்றும் உள்ளன. வன்னிவள நாட்டில் கண்ணகி வழிபாடு மிக உன்னதமான வழிபாடாக இருந்திருக்கிறது. முல்லைத்தீவு, புத்தளம், வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் கண்ணகி வழிபாடு மிக முக்கியமானதாகும். ஆனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் கண்ணகி வழிபாடு சமஸ்கிருத நெறிமுறைக்குள் வந்துவிட்டதை மாணவர்களுடனான களப் பயணத்தின் வழியே அறிந்துகொண்டேன். புங்குடுதீவு கிழக்குக் கண்ணகை அம்மனும் (ஈழத்தில் கண்ணகி அம்மன் கண்ணகை அம்மன் என்றே அழைக்கப்பெறுகிறாள்), புத்தூர் கிழக்குக் கண்ணகை அம்மனும் ராஜராஜேஸ்வரி என்று சமஸ்கிருதமயப்பட்டுவிட்டார்கள். யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயில்களும் சமஸ்கிருத வயப்பட்ட பெயர் மாற்றத்தைப் பெற்றுவிட்டதையும் களப்பயணங்களின் வழியே அறிய முடிந்தது.
யாழ்ப்பாணத்தில் சமஸ்கிருதமயமாக்கம் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வந்துள்ளது. முதலாவது: நாட்டார் தெய்வங்களின் பெயர்களை மாற்றி உயர்நிலைத் தெய்வங்களாக ஆக்குதல். பின்வரும் தெய்வங்களின் பெயர்களை நோக்கினால் இதைப் புரிந்துகொள்ள முடியும்.
அண்ணமார்-  பிள்ளையார்
விருமர்-  பிள்ளையார்
நாச்சிமார்-  காமாட்சி அம்மன்
கண்ணகை அம்மன்-  ராஜராஜேஸ்வரி
முனி-  முனீஸ்வரர் (சிவன்)
வைரவர்-  ஞான வைரவர்.
இரண்டாவது: வழிபாட்டு முறைகளில் சொல் வழக்குகளை மாற்றி உயர்நிலைப்படுத்தியதையும் காண முடிந்தது. எடுத்துக்காட்டாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:
மடை-  பொங்கல்
குளிர்த்தி-  பொங்கல்
பொங்கல்-  சங்காபிடேகம்.
மூன்று: படையல் மரபிலும் சமஸ்கிருதமயம் வளர்ந்துவிட்டதைக் களாய்வில் அறிய முடிந்தது. யாழ்ப்பாணத்து மாரியம்மன் கோவில்களில் முன்னர் உயிர்ப்பலி இடுதல், மீன், மாமிசம், குடிவகை போன்றவை படைக்கப்பட்டன. 1980களுக்குப் பிறகு இவை படிப்படியாகக் குறைந்து பொங்கலிடுதல், மடைபரவுதல், குளிர்த்தி செய்தல் என மாற்றம் பெற்றன. பிற்காலத்தில்தான் சிவாகம முறைப்படி ஆலயங்களில் பிரதிஷ்டை செய்வதும் மகோற்சவம் செய்வதும் நீர்க்கஞ்சி, பொங்கல், குளிர்த்தி செய்வது போன்ற மாற்றங்கள் ஏற்பட்டன. எனினும் இன்றும் சில கோயில்களில் மிருகப் பலி நடைபெறுகிறது.
கோயில் திருவிழாக்களில் காத்தவராயன் கூத்து, கோவலன் கண்ணகி காதை, வசந்தன் கூத்து, காமன் கூத்து, இந்திர விழா போன்ற நிகழ்த்து கலைகள் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பு, வன்னிப் பிரதேசக் கோயில்களிலும் நடைபெறுகின்றன. பங்குனி, சித்திரை, வைகாசி மாத விழாக்களில் இவை சிறப்பாக நடை பெறுகின்றன. எனினும் ஆரம்பக் காலங்களில் விடிய விடிய இடம்பெற்ற இக்கூத்து வழிபாடுகள் இன்று சுருக்கமாக நடைபெறுகின்றன. இந்தக் கூத்து ஆற்றுகையுடன் தொடர்புடையவர்களை ‘அண்ணாவியார்’ என்று மக்கள் அழைக்கின்றனர். இத்தகைய வழக்கத்தைத் தமிழகத்தில் அதிகம் காண முடியவில்லை.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பள்ளி மாணவர்களுக்கான ‘தமிழ்த் தினப் போட்டிகளில்’ இக்கூத்துகள் இன்றும் போட்டிக்கான கலையாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. பள்ளி மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்று இவற்றை நிகழ்த்துகின்றனர். சுன்னாகம் ஸ்கந்தரோதயாக் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்களுடன் நேரில் கலந்துரையாடியபோது இதை அறிய முடிந்தது. இத்தகைய மரபுத் தொடர்ச்சி அங்கிருப்பது கண்டு எனக்குப் பெருமையாக இருந்தது.
சுன்னாகம், இணுவில், வடமராட்சி, நயினாத்தீவு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ஆசிரியர்கள், மாணவர்களுடன் நான் நேரில் சென்று வந்த பிறகு யாழ்ப்பாணப் பகுதிக்குரிய வழிபாட்டு மரபு குறித்து அறிய முற்பட்டேன். இங்குள்ள வழிபாட்டு மரபும் மற்ற பண்பாட்டுக் கூறுகளைப் போலவே அதன் தனித்துவத்தைக் காட்டுவதாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் சாதிக்கு ஒரு தெய்வம் எனும் நிலையில் சாதித் தெய்வங்கள் (குலதெய்வங்கள்) இருக்கின்றன. பள்ளர்கள் அண்ணமாரை வழிபடுகின்றனர். பறையர் வல்லியக்கனைக் கும்பிடுகின்றனர். வண்ணார் பெரிய தம்பிரானை வணங்குகின்றனர். குயவர், பண்டாரம் இருவரும் பிள்ளையாரை வழிபடுகின்றனர். தட்டார் நாச்சிமாரை வழிபடுகின்றனர். கொல்லர், நட்டுவர், தச்சர் ஆகிய மூவரும் காளி அம்மனை வழிபடுகின்றனர். தச்சர் குறிப்பாக புது வீடு கட்டினால் ‘தச்சன் காளிப் பொங்கல்’ பொங்குகின்றனர். பிரா மணர்கள், சைவக் குருக்கள், வெள்ளாளர் ஆகியோர் சிவன், முருகன், விஷ்ணு, துர்க்கை அம்மன் ஆகிய தெய்வங்களை வணங்குகின்றனர்.
நாங்கள் சென்று வந்த பகுதிகளில் குயவர், பண்டாரம் இருவருக்கும் பிள்ளையார் குலதெய்வமாக இருந்தாலும் மற்ற சாதியார் பிள்ளையாருக்குத் தனிக் கோவில் கட்டி வழிபடுகின்றனர். இதனால் பிள்ளையார் அச்சாதிப் பெயராலேயே அழைக்கப்படுகின்றார். ‘குசவப் பிள்ளையார்’, ‘கோவியப் பிள்ளையார்’, ‘வெள்ளாளப் பிள்ளையார்’, ‘பண்டாரப் பிள்ளையார்’, ‘தச்சப் பிள்ளையார்’ எனச் சாதிவயப்பட்ட பிள்ளையார்களைக் காண முடிந்தது.
சாதிய வழிபாட்டு முறைகளில் செல்வச் சந்நிதி முருகன் கோவில் வழிபாட்டு முறை தனித்துவமானது. சமூகவியல் மாணவர்களுடன் தொண்டமனாறுக்குத் தனிப் பேருந்தில் போய் இறங்கியதும் வாய் கட்டிய பூசாரிகளை அங்குள்ள செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் பார்த்தோம். இவர்கள் மரபுவழி வந்த கரையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். வாய் கட்டியே பூசைசெய்தார்கள். அதாவது மந்திரங்கள் இங்கு முதன்மை பெற்றிருக்கவில்லை. இவர்களை யாழ்ப்பாணத்தில் ‘கப்புறாளை’ என்று சிறப்பாகச் சொல்வார்கள். இவ்வாறு வாய் கட்டிப் பூசைசெய்யும் முறை இலங்கையின் மட்டக்களப்பு பகுதியில் உள்ள ‘மண்டூர் கந்தசுவாமி’ கோவிலும் கதிர்காமத்திலும் உண்டு.
கதிர்காமத்தில் இன்றும் வேட்டுவ மரபில் வந்தவர்கள் பூசைசெய்யும் முறையும் காணப்படுவதைச் சமூகவியல் பேராசிரியர்கள் எனக்குச் சொன்னார்கள். கதிர்காம முருகன் கோவில் தங்களுக்குச் சொந்தமென இப்போது சிங்களவர்கள் முனைகின்றனர். முருகன் பெயரைச் சிங்கள மரபிற்கேற்ப ‘கதரகம தெய்யோ’ எனப் புதுத் தொன்மத்தை உருவாக்கியுள்ளனர். கண்டியில் உள்ள முருகனைப் பௌத்த வர்த்தகர்கள் கதரகம தெய்யோ என்றே வழிபடுகின்றனர். கண்ணகி பத்தினித் தெய்யோ என்றும் பிள்ளையார் கணபதி தெய்யோ என்றும் இன்னும் பல இந்துக் கடவுள்களைப் பௌத்த மயப்படுத்தி வழிபடுவதன் வரலாற்றையும் இங்கு இடம்பெற்ற ஆய்வுகளின் வழி அறிந்துகொண்டேன்.
இவற்றைவிடப் பராராச சேகரப் பிள்ளையார், செகராசசேகரப் பிள்ளையார், நல்லூர் கந்தசுவாமி கோவில், வீரமாகாளியம்மன் போன்ற கோயில்கள் யாழ்ப்பாணத் தமிழ் மன்னர்களின் வரலாற்றுடன் தொடர்புகொண்டுள்ளன. மேலும், நகுலேஸ்வரம் சிவன் கோவில், மாவிட்டபுரம் முருகன் கோவில் தென்னிந்திய மன்னர்களின் வரலாற்றுக் கதைகளுடன் இணைந்தனவாக இன்றும் வழிபடப்பட்டுவருகின்றன என்பதையும் விரிவாக அறிந்துகொண்டேன்.
யாழ்குடா நாடு தொல்லியல் சான்றுகள் நிறைந்த பகுதியாகும். திராவிட நாகரிகத்தின் மிக முக்கியமான சான்றுகள் இங்கிருப்பதைக் கந்தரோடைக்குச் சென்றபோது அறிந்துகொள்ள முடிந்தது. கந்தரோடை யாழ்குடா நாட்டின் சுன்னாகப் பிரதேசத்தில் உள்ளது. இது யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே அண்ணளவாக 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரிய திராவிடர்கள் கந்தரோடையில் வாழ்ந்ததற்கான சான்றுகள் வெகுவாகவே கிடைக்கின்றன. கந்தரோடையில் கிடைத்த நாணயங்கள் தென்னிந்தியாவுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே இருந்த வர்த்தகப் பண்பாட்டுத் தொடர்புகளைக் காட்டுகின்றன. கிரேக்க உரோம நாடுகளுடன் கந்தரோடை கொண்டிருந்த தொடர்பையும் அகழாய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த கந்தரோடையை இப்போது சிங்களமயமாக்கும் வகையில் ‘கத்துறு கொட’ என்று அழைக்க முயல்வது நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது.
நான் யாழ்ப்பாணத்திற்குப் போன காலம் போர் முடிந்து பரபரப்பாக இருந்த நேரம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நான் தங்கியிருந்தபோது மாணவர்களுடன் பல வேளைகளில் கலந்துரையாடினேன். அவர்கள் போர் இடம்பெற்ற காலத்திலும் போருக்குப் பின்னரான காலத்திலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமக்குப் பல்வேறு வகையில் உதவிவருவதைக் குறிப்பிட்டனர். குறிப்பாக மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குதல், வெளிநாட்டிலிருந்து வந்த உதவித் தொகைகளைப் பகிர்ந்தளித்தல், அகதி முகாம்களிலும் புனர்வாழ்வு முகாம்களிலும் கல்வியைத் தொடராது இடைநிறுத்திய மாணவர்களை அங்கிருந்து வெளியே எடுத்து விசேட வகுப்புகள் நடத்துதல் போன்ற இன்னோரன்ன சேவைகள் அனைத்தையும் நேரில் கண்டபோது நான் நெகிழ்ந்துபோனேன். பல்கலைக்கழகத் துணைவேந்தர் சண்முகலிங்கன் தாயும் தந்தையுமாய் நின்று இரவு பகல் பாராமல் இம்மாணவர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டதை நேரில் பார்த்தேன். யாழ் பல்கலைக்கழகம் சமூகத்தின் பல்கலைக்கழகமாகப் புதிய பரிமாணம் பெற்றிருந்ததையும் கண்டேன்.
இன்னொருபுறம் யாழ்ப்பாணத்தின் நினைவுகள் தமிழ்ப் பண்பாட்டின் நீண்ட நெடிய அறுபடாத மரபை நம்முன் கொண்டுவருகின்றன. யாழ் நகரமும் சரி, யாழ்குடா நாடும் சரி பழமை மாறாமல் பண்பாட்டைப் பேணிவரும் பிரதேசமாகக் காணப்படுகின்றன. யாழ் பல்கலைக்கழகத்தில் நான் இருந்தபோது கலைவரலாற்றுத் துறையினர் ஏற்பாடுசெய்திருந்த ‘குத்து விளக்குக் கண்காட்சி’யைத் தொடங்கிவைக்குமாறு அழைத்தார்கள். உண்மையிலேயே வியந்துபோனேன். எத்தனை விளக்குகள், எத்தகைய மரபு. கண்காட்சியில் பனங்காய் பணியாரம் செய்து வழங்கினார்கள். நிகழ்வில் மரபைக் காட்டும் அம்சங்களே நிறைந்திருந்தன.
யாழ்ப்பாணத்தில் இன்று நாம் காணுகின்ற நவீனத்துவம் பண்பாட்டு மரபைப் பெரிதும் அழித்துவிடவில்லை என்பதையும் நான் நுட்பமாக உணர்ந்துகொண்டேன். ஆனால் ஒரு சோகம் என்னைவிட்டு நீங்கவில்லை. யாழப்பாணத்தின் பெரும்பகுதி மக்கள் கனடாவிற்கும் பிற மேலை நாடுகளுக்கும் புலம்பெயர்ந்துவிட்டார்கள். இதன் விளைவாக ஆரம்ப காலத்தில 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்ந்த யாழ்ப்பாணப் பிரதேசத்தில் தற்போது 5 லட்சம் மக்கள்தாம் வாழ்கின்றார்கள் என்று பத்திரிகையின் வாயிலாக அறிந்தபோது என் மனம் வெதும்பியது. இது யாழ்ப்பாண மக்களின் வாழ்வுரிமையுடன் தொடர்புபட்ட கல்வி, பொருளாதாரம், அரசியல் பங்கேற்பில் தாக்கம் செலுத்துமானால் பாரிய மாற்றங்கள் நிகழக்கூடும்.
(இக்கட்டுரைகாலச்சுவடு இணையத்தில் வெளியானது)

 

Geen opmerkingen:

Een reactie posten